செய்திகள்

அரசியலமைப்பிற்கோ சுயாதீனத் தன்மைக்கோ பாதிப்பை ஏற்படுத்த தயாரில்லை

maithri smile

சர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ எதனையும் செய்வதற்கு தான் தயாராக இல்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (27) முற்பகல் களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள முன்மொழிவு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு எத்தகைய தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சரியான விடயங்களை ஏற்றுக்கொள்வதைப்போன்று அதில் உள்ள பிழையான விடயங்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். இதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணை அனுசரணை வழங்கி அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர் அதனை கவனத்திற்கொள்ளவும் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதனை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அதனை தான் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அது தனக்கு அறிவிக்கப்படாமல் அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது அதன் செயலாளருக்கு தெரியாமலேயே அவ்வாறு கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் எமது நாட்டு தரப்பினரின் பிழையான தீர்மானங்களின் காரணமாக இடம்பெற்ற அந்த நிகழ்வு குறித்து தனது முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்வு இந்த நாட்டின் முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியதே அன்றி அதற்கு கீழான பதவிகளை வகிப்பவர்களுக்கு உரியதல்ல என ஜனாதிபதி வலியுறுத்தினார். ஜெனீவா ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவிருந்த பிரதிநிதிகள் குழுவானது தமது ஆலோசனைகளின்றியே நியமிக்கப்பட்டிருந்தது என தெரிவித்த ஜனாதிபதி, பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் தான் அந்த பிரதிநிதிகள் குழுவில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அண்மையில் அவ் ஆணைக்குழுவில் முன்வைத்த உரையை நாட்டிற்கு பொருத்தமான முறையில் ஆற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரிவித்தார். அன்று நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இன்றும் வேறொரு வடிவத்தில் மேலெழத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிற்கு சிறந்தவொரு வெளிநாட்டுக் கொள்கை காணப்பட வேண்டும். எனினும் நாட்டின் அரசியலிலும் அரசாங்க ஆட்சியிலும் அவை தலையீடு செய்யக்கூடாது என்பதோடு இன்று போலவே எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு எமது நாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.

களுத்துறை, மீகஹதென்ன புதிய பொலிஸ் பிரிவினை மக்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய பொலிஸ் நிலையத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார். மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, பாலித்த தெவரப்பெரும, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் களுத்துறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top