செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று உடன்பிறப்புக்கள் பரீட்சையில் சாதனை!

o.l result

ஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்து வாழ்த்துக்களைப் பெற்றுவருகின்றனர்.
குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா திஸாநாயக்க ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் மகனும் ஒரே கருவில் பிறந்தவர்கள்.
பிறந்த நாளில் இருந்து இம்மூன்று பேரும் தனித்துப் பிரிந்து சென்றதில்லை. எங்கு சென்றாலும் மூவரும் தங்கள் உறுதியோடும், நம்பிக்கையோடும் வலம்வருவார்கள். ஆரம்பக் கல்வியை நாஹொல்லாகொட மகாவித்தியாலத்தில் கல்வியை தொடங்கினர். புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று பேரும் சித்தி பெற்றனர்.
இதனையடுத்து குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலத்தில் தமது மேலதிக கல்வியைத் தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மூவரும், ஒன்பது ஏ திறமைச் சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஈ.எம். திவ்யாஞ்சலி தெவ்மினி குமாரசிங்க, ஈ.எம். நவாஞ்சலி தெத்மினி குமாரசிங்க, ஈ.எம். பிரியங்ஞ்ஜன பியுமன்ன குமாரசிங்க ஆகிய சகோதர சகோதரிகளே இத்திறமைச்சித்தியைப் பெற்று இலங்கையில் சாதித்திருக்கிறார்கள்.
தங்களின் வெற்றியின் இரகசியம் குறித்துப் பேசிய அவர்கள், நாங்கள் ஒன்றாகப் பிறந்தோம். ஒன்றாகவே வளர்ந்தோம். ஆரம்பக் கல்வியில் ஒன்றாகப் பயின்று, புலமைப் பரிசிலில் விசேட சித்தியைப் பெற்று குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலத்தில் சேர்ந்த காலத்திலிருந்து நாங்கள் அனைவரும், முதல் இரண்டு மற்றும் மூன்றாம் பிள்ளைகளாக வகுப்பில் மதிப்பெண்களைப் பெறுவோம்.
எமது ஆசிரியர்கள் எங்களுக்கு அர்ப்பணிப்புடன் கல்வி புகட்டினர். படிப்பித்தலும் அதனை கிரகித்தலும் மிக முக்கியமானது. நாங்கள் எப்பொழுதும் வகுப்பறைகளுக்குச் செல்லாமல் இருந்ததில்லை. நண்பர்களுடன் தேவையற்ற இடங்களுக்குச் செல்வதில்லை. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
எமது தந்தையார் எங்களுக்குச் சிறந்த நண்பராக இருந்தார். படி படி என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொந்தரவு கொடுத்ததில்லை. வாழ்க்கையில் பிறர் என்ன சொன்னாலும் அதற்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று கூறுவார்கள். அதேபோன்று அம்மாவும் அப்பாவும் எங்களுடன் ஒன்றாக அமர்ந்து சமூகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்வார்கள்.
இச்சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்வதற்கு வரையறைகளை தெளிவுபடுத்திக் கூறுவார்கள். பெற்றோர்கள் எம் பின்னால் இருந்தாலும் எமது சுதந்திரத்திற்கு எந்தத் தடையும் இருந்தில்லை. எமக்கு முகநூலில் கணக்குகள் எதுவும் இல்லை. கைத்தொலைபேசி கூட எம்மிடம் இல்லை. ஆனாலும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டதாக நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. எங்களை அனைவரும் அளவிற்கதிகமாக நேசித்தனர்.
இந்நிலையில் குறித்த மாணவர்களின் தந்தையார் பேசிய போது, நானும் என் மனைவியும் இவ்வுலகில் மிகச்சிறந்த அதிஷ்டசாலிகள். இச்சந்தர்ப்பத்தில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரே பிரசவத்தில் என் மனைவிக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. துரதிஷ்டவசமாக ஒரு மகள் இறந்து போனாள். அவளும் உயிரோடு இருந்திருந்தால், மொத்தமாக 36 ஏ சித்திகள் கிடைத்திருக்கும்.
நாங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம் எமது குழந்தைகள் வீட்டில் படித்த விதத்தில் இப்பெறுபேறுதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். அவ் எதிர்பார்ப்பினை அவர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
எமது பிள்ளைகள் கடுமையாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களில் சிறிது நேரமாவது விளையாடுமாறு கூறுவோம். ஆனால், அவர்கள் அவர்களின் இலக்கை குறிவைத்து அடைந்துள்ளனர் என்றார் பெருமிதத்தோடு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top