செய்திகள்

காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை – ஜனாதிபதி

maithri smile

கொள்கை கோட்பாடுகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாரணர் இயக்கத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (06) பிற்பகல் வெயாங்கொட சியனே தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெற்ற 12வது தேசிய சாரணச் சிறுவர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும்போது குறைந்தது அது பாடசாலை பிள்ளைகளில் 25 வீதத்தையேனும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்கப் பண்பாடுகளினால் வளம்பெற்ற எதிர்கால தலைமுறை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு சாரணர் இயக்கம் மிகவும் முக்கியமானதாகுமென்றும் தெரிவித்தார்.

சிறந்ததோர் எதிர்கால தலைமுறையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டு கல்வியியலாளர்களின் ஆலோசனைக்கேற்ப குறித்த நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கை சாரணர் தலைமையகத்தின் மூலம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேசிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் தேசிய சாரணச் சிறுவர் முகாம் “எமது தாய் நாடு எமது மரபுரிமை” என்ற கருப்பொருளின் கீழ் இன்று முதல் ஏப்ரல் 08 திகதி வரை வெயாங்கொட சியனே தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெறுகின்றது.

இந்த முகாமில் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்துள்ள 07 வயதுக்கும் 11 வயதிற்கும் இடைப்பட்ட 7500 சாரணச் சிறுவர்களும் சுமார் 750 ஆசிரியர்களும் கலந்துகொண்டுள்ளதுடன், முதல் முறையாக தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த சாரணச் சிறுவர்களும் சுமார் 300 சாரண தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த முகாமில் பல்வேறு விசேட அம்சங்கள் இடம்பெறவுள்ளதுடன், இப்பிள்ளைகளின் வயதிற்கேற்ப பாட துறைகளின் கீழ் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்வேறு மகிழ்வளிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

சாரணச் சிறுவர் முகாமின் பதக்க தொகுதி அதன் ஏற்பாட்டாளர் வத்சலா விஜே விக்ரமவினால் ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதன் நினைவுப்பலகை செயலாளர் ரேணுக்கா சில்வாவினால் ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னபெரும, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, தலைமை சாரணர் ஆணையாளர் பொறியிலாளர் மெரில் குணதிலக்க உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top