சர்வதேசம்

‘பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது’

sha muhammad pakistan

தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள் என்று கூறியுள்ளது.

எல்லைதாண்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவங்ளால் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உண்டான பதற்றம் தணிந்து வருவதாகத் தோன்றி வரும் சூழலில், இன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஷா மஹ்மூத் குரேஷி இதைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தாக்குதல் ஏப்ரல் 16 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் நடக்க வாய்ப்புண்டு என்றும் தங்கள் கவலைகளை ஐ.நா பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாகிஸ்தானிடம் என்ன ஆதாரம் உள்ளது, எந்த நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தும் போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.இது குறித்த தகவல்களை பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்வார் என்று குரேஷி தெரிவித்தார்.

‘பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள்’

இந்தப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகளை மறுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளை இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தூண்டவே பொது வெளியில் பாகிஸ்தான் இவ்வாறு பேசுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள மறுப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மீது நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களில் தமக்கு இருக்கும் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ள முடியாது. தமது சொந்த மண்ணில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நம்பகத்தன்மை மிக்க மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

காஷ்மீர் பதற்றங்கள்

பிப்ரவரி 14 அன்று, இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் பிப்ரவரி 27 அன்று, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் என்று தாம் கூறும் ஓர் இலக்கின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியது.

அடுத்த நாள் இந்திய விமானப்படை விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான், அதன் விமானியையும் சிறைபிடித்தது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி இந்தியா போர்ப் பதற்றங்களை அதிகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் என்று சில பாகங்களை இந்தியா காட்டியது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது.

செயற்கைக்கோள் புகைப்படங்களில் சேதம் அதிகம் தெரியாததால், பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வெற்றி குறித்து கேள்விகள் எழுந்தன.

இந்தியக் கைதிகள் விடுதலை

தங்கள் நாட்டில் உள்ள இந்தியக் கைதிகள் 360 பேரை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் வெள்ளியன்று தெரிவித்தது. அவர்களில் 100 பேர் ஞாயிறன்று விடுதலை செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான இந்திய மீனவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் பல மாதங்களை பாகிஸ்தான் சிறையில் கழித்தனர்.

லாகூர் அழைத்துச் செல்லப்படும் அவர்கள் வாகா – அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என ஈதி ஃபவுண்டேஷன் எனும் பாகிஸ்தான் தொண்டு அமைப்பைச் சேர்ந்த சாத் ஈதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

BBC.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top