செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக தரம் 7 அல்லது 8 இல் பரீட்சை?

maithri in funcn

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது நாட்டின் கல்வித்துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோமென ஜனாதிபதி தெரிவித்தார்.

கொடகம சுபாரதி மகா மாத்ய வித்தியாலயத்தில் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக 07 அல்லது 08ஆம் ஆண்டில் பரீட்சை ஒன்றினை நடாத்தி அப்பெறுபேறுகளுக்கமைவாக மாணவர்களின் திறமைகளுக்கேற்ப ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் மாணவர்களை நெறிப்படுத்தும் வகையில் கல்வியியலாளர்களின் வழிகாட்டலில் அப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்கமைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணிதவியலாளர்கள், விவசாய நிபுணர்கள், தொழிநுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட துறைகள் வரை பிள்ளைகள் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதனூடாக கிடைக்குமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, புலமைப்பரிசில் தொடர்பில் கல்வி, விஞ்ஞான ரீதியில் சிக்கல் நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார். கல்வியை பெற்றுக்கொள்வதற்கு வசதியற்ற மிக வறிய குடும்பங்களின் பிள்ளைகள், அரச பாடசாலை உள்ளிட்ட அவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றினையும் வழங்கி, அம்மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்குடன் ஆரம்பமான புலமைப்பரிசில் பரீட்சை இன்று பிரபல பாடசாலைகளிலும் ஜனரஞ்சகமான பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிப்பதற்கான ஒரேயொரு தடைத்திறனாக மாறியுள்ளதன் காரணமாக கல்வித்துறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். அத்தோடு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இன்று பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுள் 86 சதவீதத்தினர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்பதோடு, சகல பாடசாலைகளுக்கும் தேவையான வளங்களை பெற்றுக்கொடுத்து நாட்டின் அனைத்து பிள்ளைகளும் தமது திறமைக்கு ஏற்ப முன்னேறுவதற்கான வசதிகளை வழங்கும் கல்வி முறையின் தேவை குறித்து ஜனாதிபதி இதன்போது தெளிவூட்டினார். பட்டங்களை பெற்றதன் பின்னர் வேலைவாய்ப்புகளை கோரி நடுத்தெருவில் பேராட்டம் மேற்கொள்ளும் கல்வி முறையிலும் விரைவில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  உலகின் வளர்ச்சியடைந்த எந்தவொரு நாட்டிலும் ஒரு பாடசாலையில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுமில்லை என்பதோடு, மாணவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவர்களது ஒழுக்கத்தை கட்டியெழுப்பக் கூடியவாறு வரையறுக்கப்பட்ட மாணவர்களே, பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர் என்பதை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே போட்டித் தன்மையை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சகல பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கும் நற்பண்புகளையுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்பக் கூடியவாறு கல்வி முறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக கல்வித்துறையினர் அனைவரினதும் துரிதமான கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். ‘சிறந்தவை பிள்ளைகளுக்கே’ என்ற கருப்பொருளில் மேல் மாகாண சபையின் நிதியொதுக்கீட்டில் கொடகம சுபாரதி மகா மாத்ய வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலையரங்குடன் கூடிய 03 மாடி கட்டிடத்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.

ஜனாதிபதி அவர்களின் வருகையையொட்டி பாடசாலையில் மரநடுகை நிகழ்வொன்றும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கலையரங்கத்துடன் கூடிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். விசேட திறமைகளை வெளிகாட்டிய மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி பரிசில்களையும் இதன்போது வழங்கிவைத்தார். மாணவி ஒருவரால் வரையப்பட்ட ஜனாதிபதி அவர்களின் உருவம் தாங்கிய சித்திரம் ஒன்றும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்தோடு மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, மாகாண அமைச்சர்கள் காமினி திலக்கசிறி, ஹெக்டர் பெத்மகே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவிசாவலை தொகுதி அமைப்பாளர் சுமித் சொய்சா உள்ளிட்டோரும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள். பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top