பிரதான செய்திகள்

விசாரணைக்கு அழைத்துச் சென்று காணாமல் போனவர்கள் குறித்த நினைவு கூரல்

160905111854_remembrance3_640x360_bbc_nocredit

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், 1990-ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவ சீருடையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களை, அவர்களது உறவினர்கள் இன்று (திங்கள் கிழமை) 26-வது ஆண்டாக நினைவு கூர்ந்தனர்.

1990-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதியன்று காணாமல் போனதாக கூறப்படுபவர்களை நினைவு கூர்ந்து ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகளும் நடைபெற்றன.

1990-ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில், இக்காலகட்டத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறு முலை வளாகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மட்டக்களப்புக்கு நகருக்கு வடக்கே தன்னாமுனை தொடக்கம் சித்தான்டி வரையிலான 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தஞ்சம் பெற்றிருந்த வளாகம் அகதி முகாமாக காணப்பட்டது.

அகதி முகாமில் தங்கியிருந்தவர்களில் குடும்பஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 174 பேர் செப்டம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் ராணுவ சீருடை அணிந்தவர்களினால் விசாரணைக்கு எனக் கூறி பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளனர்.

சம்பவத்தன்று, அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதியன்று அதிகாலை அகதி முகாம் ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு ஆண்கள் மூகமுடி அணிந்த நபர்கள் முன் வரிசையாக நிறுத்தப்பட்டு, 158 பேர் ஓரே நாளில் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களால் அதாவது செப்டம்பர் 23-ஆம் தேதியன்று, 16 பேர் மற்றொரு சம்பவத்தின் போது அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இந்த இரு சம்பவங்களிலும் ஆட்கள் காணாமல் போன சம்பவத்திற்கு ராணுவம் தான் பொறுப்பு என ராணுவ அதிகாரிகள் சிலரது பெயர் குறிப்பிடப்பட்டு குற்றச்சாட்டுக்கள் அக் காலப் பகுதியில் முன் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு அமைச்சு அதனை மறுத்தது.

1990 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன் ஆலயம் அகதி முகாம்கள் மற்றும் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி சம்பவங்களின் போதும், தனித்தனி சம்பவங்களிலும் நூற்றுக் கணக்கானோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போயுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top