-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்டவலுவற்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இறுதி கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மக்களை வெளியேற விடாமல் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக தயா மாஸ்டர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தயா மாஸ்டர், கடந்த ஓகஸ்ட் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், வடமாகாணத்திலிருந்து வெளியேறவும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் மீதான குற்றச்சாட்டு அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வரவில்லையென்பதை அரச தரப்புச் சட்டத்தரணி கூறினார்.
இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நீதவான் சசி மகேந்திரன் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் தயா மாஸ்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் வழக்கு முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில்,
“பயங்கரவாதம் மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத விதிமுறைகளுக்கு அமைய சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சாதாரண நீதிகளுக்கு அப்பாற்பட்டது. அதற்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் குரல் எழுப்பி வருகின்றன. முன்னைய அரசாங்கம் கூட இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய மாட்டோம் எனக்கூறியிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலளாரின் நிபுணர் குழுவின் விதிமுறைகளுக்கமைய இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சட்டவலுவற்றவை. பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை மீளப் பெற்று, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், இவ்வாறு ஒரு புதிய விதிமுறையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு விதிமுறைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமையை ஆட்சேபிக்கின்றேன். இதனை அரச தரப்பு சட்டத்தரணியிடம் திறந்த நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தேன்” என்றார்.
