கியூபாவிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் தடுப்பு முகாமான குவான்டனாமோவில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, தற்போது உருகுவேயில் வசித்துவரும் ஒருவர், உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிரியாவைச் சேர்ந்த 45 வயதான ஜிஹான் தியாப் என்ற குறித்த நபர், 12 ஆண்டுகளாகக் குவான்டனாமோவில் தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, உருகுவேயில் குடியமர்த்தப்பட்டார்.
ஆனால், துருக்கியிலுள்ள தனது குடும்பத்தினருடன் தன்னை இணைக்க வேண்டுமெனக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் முன்னெடுத்ததோடு, அதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்படுவதாகவும் நாடித்துடிப்புக் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, அதிக வலியில் அவர் காணப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
உருகுவேயில் குடியேற்றப்பட்ட முன்னாள் குவான்டனாமோ கைதிகள் ஆறு பேரும், உருகுவேயில் தங்களுக்கான வசதிகள் போதாது எனவும் தங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது எனவும் தொடர்ந்தும் போராடுபவதோடு, தனது குடும்பத்தோடு தன்னை இணைப்பதற்குப் போதுமான நடவடிக்கைகளை உருகுவே மேற்கொள்ளவில்லை என, தியாப் குற்றஞ்சாட்டுகிறார்.
ஆனால், தியாப்பைத் துருக்கிக்குள் அனுமதிக்க, அந்நாடு மறுத்துவருகிறது எனத் தெரிவிக்கும் உருகுவே அதிகாரிகள், அவரது குடும்பத்தை, உருகுவேயுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
