செய்திகள்

அமெரிக்கா செல்லும் ரஜினி…

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இவர்களில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பிரமாண்டமான பொதுக் கூட்டங்களை நடத்தினார்.

ராமநாதபுரத்தில் கட்சியை தொடங்கிய அவர் மதுரை செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்தார். கோவை, ஈரோடு பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார். அரசியலில் தனது கொள்கை என்ன என்பதை அறிவித்துள்ளார்.

அரசியல் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பத்திரிகையாளர்களையும் அவ்வப்போது சந்திக்கிறார். மே மாதம் கோவையில் சுற்றுப் பயணம் செய்யப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறினார்.

ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு 100 நாட்கள் கடந்துவிட்டன. என்றாலும் ரஜினியின் புதிய கட்சி பற்றிய எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தனது கட்சியை பலப்படுத்துவதற்காக கட்சியின் அடிப்படை அமைப்பை பலப்படுத்தும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்காக ரஜினி மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. மன்ற உறுப்பினர்களை அதன் அகில இந்திய நிர்வாகி வி.எம்.சுதாகர், மாநில செயலாளர் எம். ராஜூ மகாலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.

அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டார். பின்னர் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டார். இது தவிர மீதம் உள்ள மாவட்டங்களுக்கும் வட்ட அளவிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டு வருகிறார்கள்.

இன்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களுக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் கட்சிக்காக உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடைபெறுவதாக கூறப்பட்டது. 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்கப்போவதாக சொன்னார்கள். தற்போது அந்த வேகம் இல்லை. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள் என்ற விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ரஜினிகாந்த், மக்கள் மன்ற ரசிகர்களை ஒருசில மாவட்ட ஆலோசனை கூட்டங்களில் சந்தித்தார். மற்ற மாவட்டங்களுக்கு அவருடைய பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டது. மார்ச் 5-ந்தேதி ஒரு பல்கலைக்கழக விழாவில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி, தனது பணி எம்.ஜி.ஆர். போல மக்கள் நலம் சார்ந்ததாக இருக்கும் என்றார். அதன் பிறகு பெரிய அளவில் கட்சியில் ஈடுபாடு காட்டவில்லை. தற்போது ரஜினி கட்சியின் செயல்பாடு மந்தமாக இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை அழுத்தமாக கூறினார். ரஜினி என்ன சொல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். இது போல் ஸ்டெர்லைட் விவகாரம் பற்றிய அவரது கருத்து என்ன என்பதையும் மக்கள் அறிய விரும்பினார்கள்.

இதில் காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக இருக்க முடியும் என்று ரஜினி டுவிட்டரில் தெரிவித்தார். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதற்கு அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று ரஜினி கூறினார். முதன் முதலாக மாநில அரசை விமர்சித்த அவருடைய பேச்சு ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்தும் விமர்சனம் வந்தது.

பின்னர் ரஜினி எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்தார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தின் போது போலீஸ்காரரை ஒருவர் தாக்கிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரஜினி, ‘போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சகட்டம். இதை கிள்ளி எறிய வேண்டும். காவலர்கள் மீது கை வைப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார்.

ரஜினியின் இந்த கருத்து மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. ரஜினி காவிரி பிரச்சினைக்கு எதிராக இருக்கிறார். மத்திய பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். காவிரி உரிமைக்காக போராடியவர்களை கொச்சைப்படுத்தி விட்டார் என்று திரைப்பட இயக்குனர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு அமைப்புகளும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top