செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கெதிராக சாதித்த இந்தியா: ஓர் அலசல்…

australia vs india

கடந்த 30 ஆண்டுகளில், ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுவிட்டது என்றவுடன் சராசரி கிரிக்கெட் ரசிகன் இயல்பாக கேட்கும் கேள்வி இவைதான். எந்த பேஸ்ட்மேன் அதிக ரன்கள் விளாசினார்? சுழல்பந்துவீச்சாளர்கள் எத்தனை விக்கெட்டுகளை அள்ளினர்?

ஏனெனில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் ஒரு டெஸ்ட் தொடரை தொடரை வென்று தர முடியாது என்ற அவநம்பிக்கை காரணமாக இருக்கலாம்.

கடந்த கால தரவுகளை அலசிப்பார்த்தால் பெரும்பாலும் மேற்கூறிய கேள்விகளை மெய்ப்பிப்பதுபோல இருக்கும்.

இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில், பெரும்பாலும் தொடக்கத்தில் நான்கைந்து ஓவர்கள் வீசிவிட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் ஒதுங்கிக் கொள்ள, அதன்பின் சுழல்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே தொடரும்.

பெயருக்கு அணியில் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள்

வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஓரிரு போட்டிகளில் யாராவது ஒரு வேகப்பந்துவீச்சாளர் சிறப்பாக பந்துவீசுவார். ஆனால், அவருக்கு பக்கபலமாக ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்த இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணியால் வெல்ல முடியாமல் போயிருக்கும்.

சாதித்த இந்திய சூறாவளிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1980 மற்றும் 90களில் விளையாடிய இந்திய அணிகளில் ஓரிரு வேகப்பந்துவீச்சாளர்களே இருப்பார்கள். மற்றவர்கள் மிதவேகப் பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். அவர்களின் பந்துவீச்சு வேகம் எதிரணி வீரர்களை அச்சுறுத்துவதாக அமையாது.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இந்திய வேக மற்றும் மிதவேகப்பந்து வீச்சாளர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. பந்துவீச்சுக்கு சாதகமான களத்தில்கூட எதிரணி பேட்ஸ்மேன்கள் அவர்களின் பந்துவீச்சில் எளிதாக ரன் குவிப்பார்கள்.

கபில்தேவ், ஸ்ரீநாத், ஜாஹீர் கான் போன்ற மிக சிலரை தவிர மற்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஜாஹீர் கான்படத்தின் காப்புரிமைAFP
Image captionஜாஹீர் கான்

ஆஷிஷ் நெஹ்ரா,முனாப் பட்டேல், ஸ்ரீசாந்த் போன்றோரின் பந்துவீச்சில் வேகம் இருந்தாலும், உடல்தகுதி மற்றும் நிலையாக பங்களிப்பது போன்ற அம்சங்களில் தடுமாறியதால் அவர்களால் நீண்ட காலம் டெஸ்ட் சிரிக்கட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஒரிரு ஆண்டுகள் சிறப்பாக பங்களித்த இர்பான் பதான், பேட்டிங் , பவுலிங் என்ற இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்ற தடுமாற்றத்தில் தனது பந்துவீச்சு வேகத்தை இழந்தார்.

அகர்கர் நீண்ட காலம் விளையாடினார். ஆனால் அவரது பந்துவீச்சு ஒருநாள் போட்டிகளில் ஏற்படுத்திய தாக்கம் டெஸ்ட் போட்டிகளில் இல்லை என்றே கூறவேண்டும்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்துக்கு சாதகமாக இருந்தது. அதனால் அங்கு இயல்பாக உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாகுவதாக கூறப்பட்டது.

வரலாறு படைத்தது இந்தியா: சாதித்த இந்திய சூறாவளிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அப்படியானால் அதே உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை இந்தியாவை போன்றே ஆடுகளங்களை கொண்ட பாகிஸ்தான் மற்றும் இலங்கையால் உருவாக்க முடிவது எப்படி?

இந்திய பந்துவீச்சாளர்களின் உணவுமுறை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் பலரின் விஷயத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக அமையவில்லை.

ஏன் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் அச்சுறுத்தும் அல்லது அணிக்கு வெற்றி பெற்றுத்தரும் பந்துவீச்சை தர முடியவில்லை? இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதில் பதில் அளிக்கப்படாமலே இந்த கேள்வி நீண்ட காலம் இருந்தது.

சாதித்தது பேட்ஸ்மேன்களா? பந்துவீச்சாளர்களா?

ஆனால், எல்லாமே மாறியது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில்தான். இந்த தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பூம்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய நால்வரின் பந்துவீச்சு எதிரணியினரை திகைக்கவைத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக சமனில் முடிய, டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்தியா வென்றது.

வரலாறு படைத்தது இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் பூம்ரா ஆகியோர் தொடரில் அதிக அளவில் விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமன்றி பல கட்டங்களில் அந்த அணியை நிலைதடுமாற செய்தனர்.

140 கி.மீட்டர் வேகத்தில் பந்துவீசி பூம்ரா, ஷமி மற்றும் உமேஷ் ஆகியோர் அசத்திவந்த நிலையில்,சராசரியாக 130 கி.மீட்டர் வேகத்தில் பந்துவீசும் இஷாந்த் சர்மா, எதிரணியினரை திகைக்க வைக்கும் விதமாக பவுன்சர்கள் வீசி விக்கெட்டுகளை குவித்தார்.

பேட் செய்வது ஆஸ்திரேலியா தானா என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் எதிரணியை தங்கள் வேகம் மற்றும் நேர்த்தியால் தடுமாற செய்தனர்.

முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பூம்ரா ஆகிய மும்மூர்த்திகளின் அபார பந்துவீச்சு சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: சாதித்த இந்திய சூறாவளிகள்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

வரும் நாட்களில் இது இந்திய வேகப்பந்துவீச்சை மிகவும் வலுவுள்ளதாக மாற்றும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

புஜாரா அடுத்த டிராவிட்டா?

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பு மற்றும் அணியின் வெற்றிக்கு உதவிய மற்ற அம்சங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளரான விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் பேசுகையில், ”இந்த தொடர் வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள்தான். வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமல்ல, சுழல்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்” என்று கூறினார்.

”குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகிய மூவரும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை குவித்தனர். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பூம்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய நால்வரும் மிக வேகமாகவும், துல்லியமாகவும் பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தனர். இதுவே இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்” என்று அவர் தெரிவித்தார்.

”பேட்ஸ்மேன்கள் பற்றி கூறுவதென்றால் புஜாராவின் பங்கு பற்றி குறிப்பிட வேண்டும். மூன்று சதங்களை விளாசிய அவர் தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினார்” என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

புஜாரா அடுத்த டிராவிட்டா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

புஜாரா அடுத்த டிராவிடாக கருதப்படுவாரா என்று கேட்டதற்கு, ” டிராவிட்டின் உயரமும், சாதனைகளும் வேறு. புஜாரா தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், டிராவிடின் அளப்பரிய சாதனைகளை எட்டுவதற்கு மிக கடுமையாக போராட வேண்டும். மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிக அளவு ரன்களை டிராவிட் குவித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று விஜய் லோக்பாலி பதிலளித்தார்.

BBC.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top