சர்வதேசம்

காந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த முயற்சிகள்

mahatma gandhi

காந்தி கொல்லப்பட்டு சரியாக 70 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதிக்கு பத்து நாட்கள் முன்னர் (20 ஜனவரி 1948) அன்றும் கோட்சேவும் அவரது கூட்டாளிகளும் காந்தியை கொல்வதற்கு முயற்சித்தனர். ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

மகாத்மா காந்திபடத்தின் காப்புரிமைCENTRAL PRESS/GETTY IMAGES

20 ஜனவரி அன்று நிகழ்ந்த கொலை முயற்சியை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

”அப்படியொரு நிகழ்வு நடந்திருந்தால் வரலாறு மாறியிருக்கும்” என்றார் மகாத்மா காந்தியின் பேரனான துஷார் காந்தி. பிபிசி மராத்தியிடம் காந்தியை கொல்வதற்கு நிகழ்ந்த முயற்சிகள் குறித்து பேசினார் துஷார் காந்தி.

70 வருடங்களுக்கு முன்னர் ஜனவரி 20 ஆம் நாள் புது தில்லியில் உள்ள பிர்லா ஹவுசில் மகாத்மா காந்தியை கொல்ல முயற்சி நடந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியா விடுதலையடைந்திருந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்பு கலவரங்கள் நடந்தன.

” இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு இடையே ஒரு காலத்தில் சகோதரத்துவம் இருந்தது. அதை இனி காணமுடியாது என்பதை அறியும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார் காந்தி. ஸ்டான்லே வால்பெர்ட் எழுதி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழக அச்சுதுறையால் வெளியிடப்பட்ட ”காந்தியின் பேரார்வம்” என்ற நூலில் ஆசிரியர் இந்த மேற்கோளை காட்டியுள்ளார்.

1948 ஜனவரி 12ஆம் தேதியன்று அனைத்து மதங்களிடையேயும் ஒற்றுமையை கொண்டு வருவதற்காக சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்தார் மகாத்மா காந்தி. மறுநாளே அவர் உண்ணாவிரதத்தை துவங்கினார். நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் மக்கள், காந்தி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என மறுத்தனர். தொடர்ந்து மக்களோடு பிராத்தனையில் ஈடுபட்ட காந்தி உண்ணாவிரத முடிவை கைவிடவில்லை,

”அனைத்து மதங்களுக்கு இடையேயும் நல்லிணக்கம் இருப்பதாக நான் உறுதியுடன் நம்பினால் மட்டுமே எனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்” என காந்தி உறுதியாக கூறியதாக வால்பெர்ட்டின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”நாட்டில் வகுப்பு கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நான் தகுதியற்றவன் என பாப்பு(காந்தி) கருதினால் நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என சர்தார் வல்லபாய் படேல் கூறினார்; எனினும் காந்தி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார்.

மகாத்மா காந்திபடத்தின் காப்புரிமைSTR/AFP/GETTY IMAGES

நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான தலைவர்கள் முன்வந்து, காந்தி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். வகுப்பு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நல்லிணக்கத்தை உறுதி செய்ய அவர்கள் மீண்டும் மீண்டும் வந்து உறுதியளித்துவிட்டுச் சென்றனர். ஆகையால் ஜனவரி 18 ஆம் தேதி காந்தி தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார் காந்தி.

புகழ்பெற்ற தலைவர்களான பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா ஆசாத் ஆகியோர் இந்த நிகழ்வின்போது இருந்தனர்.

” நாம் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்வோம் என அனைத்து தலைவர்களும் வாக்குறுதி தந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்; மேலும் அந்த வாக்குறுதியை மீறமாட்டோம் என உறுதியளித்தனர்” என அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஜனவரி அன்று என்ன நடந்தது?

அன்றைய தினம் காந்தி பிர்லா ஹவுஸுக்கு வந்தடைந்தார். ஒரு சிறிய மேடை காந்திக்காக தயாராக இருந்தது. அந்த மேடையில் இருந்து அவர் பேசத் துவங்கினார், அன்று மைக் வேலை செய்யவில்லை. இருப்பினும் அவர் தனது பேச்சை தொடர்ந்தார் ” இஸ்லாமியர்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்கள் எல்லோரும் நாட்டுக்கும் எதிரிகளே” என்றார். உடனடியாக மேடைக்கு அருகே ஒரு பொருள் வெடித்தது. ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தின் உதவியோடு அந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எனக் கூறினார் துஷார் காந்தி.

இந்த நிகழ்வு குறித்து ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து ‘லெட்ஸ் கில் காந்தி’ (Let’s Kill Gandhi) எனும் நூலை எழுதியுள்ளார் துஷார் காந்தி. குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் பெருங்குழப்பம் நிகழவே அப்போது மக்கள் ஓடத் துவங்கினர். மகாத்மா காந்தி மட்டும் தனது இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

Mahatma Gandhiபடத்தின் காப்புரிமைKEYSTONE/GETTY IMAGES

நாதுராம் கூட்டாளி, திகம்பர் பேட்ஜ் மறைந்திருந்து சுடுவதற்கு திட்டமிட்டிருந்தார் ஆனால் அவருக்கு அப்படிச் செய்ய தைரியமில்லை அதனால் ஓடிவிட்டார். நாதுராம் கோட்சே தான் இந்த திட்டத்தை வடிவமைத்தார். நாதுராம் கோட்ஸே, கோபால் கோட்ஸே, நாராயண் ஆப்தே ஆகியோர் அங்கிருந்தனர்.

கை குண்டை வீசிய மதன்லால் பஹாவேவை காவல்துறையினர் கைது செய்தனர் இருப்பினும் அவரது கூட்டாளி தப்பிவிட்டார். இந்த நிகழ்வு நடந்த பத்து நாட்களுக்கு பிறகு இதே பிர்லா ஹவுசில் மகாத்மா காந்தியை நாதுராம் கோர்ஸே சுட்டுக் கொன்றார்.

காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியது

”காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க, கபூர் ஆணையம் நியமிக்கப்பட்டது. பத்து நாட்கள் முன்பு தாக்குதல் நிகழ்ந்த நிலையில் காவல்துறை உஷாராக இருந்திருக்க வேண்டும் என விசாரணையின் போது நீதிபதி கூறியுள்ளார். இவை கபூர் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார் துஷார் காந்தி.

”காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால் ஜனவரி 30 தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். 20 ஜனவரி தாக்குதலுக்கு பிறகு ஏன் காவல்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என நீதிபதி கேட்டபோது அவர்கள் மீண்டும் வெகு விரைவில் தாக்குவார்கள் என நாங்கள் நினைக்கவில்லை’ என காவல்துறை பதில் சொன்னது” என்கிறார் துஷார் காந்தி.

Mahatma Gandhiபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ARCHIVAL

” ஜனவரி 20 நிகழ்வில் இருந்து நாம் பாடம் கற்றிருக்க வேண்டும். ஜனவரி 30 நிகழ்வை நாம் தவிர்த்திருக்க முடியும். நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் அனைவரையும் ஒன்றிணைக்கவும் காந்திஜி தன்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்துகொண்டிருந்தார். அவர் கொல்லப்பட்டிருக்காவிட்டால் தொடர்ந்து அவற்றை செய்திருப்பார் ” என சமூக ஆர்வலர் திஸ்டா செட்டில்வட் பிபிசியிடம் கூறினார்.

காந்தி படுகொலை பின்னணி குறித்து ஒரு புத்தகத்தை தீஸ்டாதான் தொகுத்துள்ளார். அதில் நிறைய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

காந்தியை கொல்ல நடந்த நான்கு முயற்சிகள்

”1948 ஜனவரி 20 தாக்குதலுக்கு முன்னதாகவே நான்கு முறை அவரை கொல்வதற்கு முயற்சிகள் நடந்துள்ளன. ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அந்த நான்கு முறை நடந்த கொலை முயற்சியிலும் பின்னணியில் நாதுராம் கோட்ஸே இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்றார் துஷார் காந்தி.

முதல் முயற்சி

புனே டவுன் ஹாலில் காந்தியின் வண்டி மீது கையெறி குண்டு வீசப்பட்டது. 1934ஆம் ஆண்டு ஹரிஜன் யாத்திரைக்காக காந்தி புனே வந்தார். காந்தியும் அவரது நண்பர்களும் இரண்டு கார்களில் பயணம் செய்தனர்.காந்தியின் வாகனம் நகராட்சி மன்றத்துக்கு தாமதமாக வந்தது. தாக்குதலாளிகள் காந்தி முதல் காரில் வந்ததாக நினைத்துக் கொண்டனர். அந்த வாகனம் மீது கையெறி குண்டை வீசினார்கள். அந்த குண்டு காருக்கு அருகே வெடித்தது. அந்த தாக்குதலில் யாரும் காயாமடையவில்லை.

இரண்டாவது முயற்சி

இரண்டாவது தாக்குதல் பஞ்ச்கனியில் நிகழ்ந்தது. 1944 ஆம் ஆண்டு காந்தியின் உடல்நிலை சிறப்பாக இல்லை. ஓய்வுக்காக அவர் பஞ்ச்கனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே தில்குஷ் என்ற பெயரில் உள்ள ஒரு பங்களாவில் தங்கியிருந்தார். ஒவ்வொரு மாலையும் அவர் உள்ளூர் கிராமவாசிகளுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுவந்தார்.

ஒருமுறை பிரார்த்தனையில் இருந்தபோது இளைஞன் ஒருவன் பட்டா கத்தியுடன் காந்தியை நெருங்கினான். காந்தியின் பாதுகாவலர் பில்லாரே குருஜி சரியான நேரத்தில் அவனை பார்த்ததால் அவனது கையில் இருந்து கத்தியை பிடிங்கினார். காந்தி அந்த இளைஞனை விட்டுவிடச் சொன்னார். இதனால் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இளைஞன் நாதுராம் கோட்சேதான் எனக் கூறியுள்ளார் பில்லாரே குருஜி.

மூன்றாவது முயற்சி :-

”காந்தியை கொல்ல மூன்றாவது முயற்சி சேவாகிராமில் நடந்தது. 1944 ஆம் ஆண்டு வர்தா நிலையத்தில் காந்தி ரயிலில் ஏறினார். அந்த சமயத்தில் ஒரு சிறுவன் காந்தியை தாக்கினான். காவல்துறை உடனடியாக அவனை பிடித்தது. முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அந்த சிறுவன் விடுவிக்கப்பட்டான். இந்த நிகழ்வு எங்கும் பதிவு செய்யப்படவில்லை,” என்கிறார் பியாரிலால். இவர் காந்தியின் வாழ்கை வரலாற்றை எழுதியவர்.

Mahatma Gandhiபடத்தின் காப்புரிமைCENTRAL PRESS/GETTY IMAGES

நான்காவது முயற்சி :-

இந்த முயற்சி 1945 ஆம் ஆண்டு நடந்தது. மும்பையில் இருந்து புனேவுக்கு ரயிலில் காந்தி வந்துகொண்டிருந்தார். மஹாராஷ்டிராவில் ரயில் கசராவை அடைந்தபோது கற்கள் மற்றும் மரக்கட்டைகள் ரயில் பாதையில் குவிக்கப்பட்டிருந்தன. ரயில் ஓட்டுநர் இந்த கற்களை பார்த்ததும் உடனடியாக தன்னால் முடிந்த வலு கொண்டு பிரேக் போட்டார். இரயில் எஞ்சின்கள் கற்கள் மீது மோதியது இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. காந்தி புனேவை சென்றடைந்ததும் ” என்னை யார் கொல்வதற்கு விரும்புகிறீர்களோ தாராளமாக செய்யுங்கள் ஆனால் என்னுடன் வரும் மக்களுக்கு எந்த தீங்கும் இழைக்காதீர்கள்” என்றார்.

”ஜனவரி 30, 1948-இல் காந்தி கொல்லப்பட்டதும் ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியடைந்தது. ஒருவருக்கொருவர் எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள். அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் காந்திக்கு அஞ்சலி செலுத்த ஒன்றாக வந்தார்கள். தனது இறப்புக்கு பின்னரும் மக்களை ஒன்றிணைக்கும் பணியை அவர் செய்திருந்தார்” என்றார் துஷார் காந்தி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top