சர்வதேசம்

சிசேரியனை குறைப்பதில் வெற்றி கண்ட சீனா – சாத்தியமானது எப்படி?

cesarean

உலகம் முழுவதும் சிசேரியன் முறையிலான பிரசவம் அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து கொண்டிருப்பதாக மருத்துவர்களும், ஆராய்சியாளர்களும் வெகு காலமாக எச்சரித்து வருகின்றனர்.

அப்படி சிசேரியன் பிரசவம் அதிகம் இருந்து, அதனை குறைக்க முயன்று, வெற்றிகரமாக மாற்றத்தை கொண்டு வந்த ஒரே ஒரு நாடு சீனா.

இந்த முயற்சியில் சீனா எப்படி வெற்றி பெற்றது என்பது, மற்ற நாடுகளுக்கு பின்பற்ற தக்க முன்னுதாரணமாக இருப்பினும் சற்று கடினமும் கூட.

ஒரு தசாப்தத்திற்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்பு வரை சிசேரியன் பிரசவங்கள் அதிக விகிதமுள்ள நாடுகளில் ஒன்றாக சீனா இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் விமர்சித்தது. ஆனால், மாற்றங்கள் மிக விரைவாக நடைபெற்றன.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் உள்ள சிசேரியன் விகிதத்தை விட சீனாவின் விகிதம் தற்போதும் இரண்டு மடங்காக உள்ளதுடன், அதிகரித்தும் வருகிறது. ஆனால், அதிகரிப்பு விகிதம் குறைந்து வருகிறது. சீனாவில், குறிப்பிடத்தக்க வகையில் சிசேரியன் விகிதம் இறங்குமுகத்தில் அதிகரித்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுசன் ஹெல்லேர்ஸ்டீன், பீக்கிங் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து, சீனாவில் 100 மில்லியன் குழந்தை பிறப்புகள் குறித்து நடத்திய ஆய்வில், சிசேரியன் பிரசவ வளர்ச்சி விகிதத்தை குறைப்பதில் பிரேசில் போன்ற நாடுகள் கொண்டு வர முடியாத மாற்றத்தை சீனா கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

சிசேரியனை தவிர்க்கும் சீன தாய்மார்கள் - காரணம் என்ன?படத்தின் காப்புரிமைCHINA PHOTOS

சீன நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், மகப்பேறு பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான கலாசாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட கவனம் செலுத்தியதே, இந்த வெற்றியின் முக்கிய முதலீடாக இருந்துள்ளது.

ஆனால், முக்கிய காரணியாக தண்டனை அச்சுறுத்தல் இருப்பதால், பெண்கள், சுகப் பிரசவத்தை தவிர தங்கள் விருப்பபடி சிசேரியன் முறையை தேர்வு செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

பென்சில்வேனியா பல்கலைகழகத்தின் ஆய்வாளர் திருமதி. எய்லீன் வாங் என்பவர், 2016ல் மேற்கொண்ட ஆய்வில், ஒரு செவிலியரிடம், சிசேரியன் பிரசவத்திற்கு கெஞ்சும் ஒரு தாயின் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், செவிலியர் அந்த தாயிடம், ‘உங்களுக்கு, சுகப்பிரசவத்திற்கு முதல் நிலையான அடிவயிற்று பிடிப்புகள் வர தொடங்கியுள்ளன. அத்தோடு, உங்கள் கருப்பை வாய் 4 செ.மீ. வரை விரிந்திருக்கிறது. இவ்வாறிருக்க, உங்களுக்கு சிசேரியன் முறை பின்பற்றபடமட்டாது. அத்தோடு, சிசேரியன் முறை உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல’ என்று கூறியுள்ளார்.

இருப்பினும், 2017ல், 17.2 மில்லியன் பிறப்புக்களை பதிவு செய்துள்ள ஒரு நாடு, சிசேரியனை தவிர்த்து மாற்றத்தை விளைவித்திருப்பது, வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று என பலரும் ஒப்புகொள்கிறார்கள்.

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றடுப்பதில் என்ன தவறு? பல தருணங்களில் அது உயிர் காக்கும் முறையாக உள்ளபோதும், ஆபத்தானது. அறுவை சிகிச்சை என்பதால், குணமடைய எடுத்துக்கொள்ளும் நேரமும் அதிகம்.

எனவே, மருத்துவ ரீதியாக தேவைப்படும் நேரங்களை தவிர, சிசேரியன் முறையை பின்பற்ற வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

சிசேரியனை தவிர்க்கும் சீன தாய்மார்கள் - காரணம் என்ன?

ஸ்காண்டிநேவிய நாடுகள் போன்ற சில இடங்களில் சிசேரியன் சிகிச்சை விகிதம் எப்பொழுதுமே குறைந்த அளவில் உள்ளது. அதற்கு காரணம் அங்கு நிலவும் கலாசாரமே.

ஆனால், சிசேரியன் பிரசவ விகிதம் உயர்ந்து காணப்படும் பிரேசில் போன்ற நாடுகளில் மாற்றத்தை கொண்டு வருவது கடினம் என்பது நிரூபனமாகியுள்ளது.

எனினும், இதற்கு தலை கீழாக சீனாவில் ஒரு தலைமுறை காலத்திற்குள்ளேயே மாற்றம் நிகழ்ந்துள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனை விவரிப்பதற்காக, ஆரோக்கிய கலாசார எழுச்சி தொடங்கி ஒரு குழந்தை திட்டத்தின் தாக்கம் வரையிலான எல்லா குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்களையும், நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு காரணி மட்டும் தீர்மானமாக தனித்து நிற்கின்றது – அது ஒருவரின் மனவலிமையின் சக்தி.

2001ல் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று, சீனாவில் சிசேரியன் முறை பிரசவங்கள் 46 சதவீதம் என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்துதான், சீனா, சுகாதாரத்துறை நடவடிக்கை மூலம், தேசிய சுகாதார மற்றும் குடும்ப திட்டமிடல் ஆணையத்தின் பத்தாண்டு திட்டத்தில், சிசேரியன் முறை பிரசவங்களின் விகிதத்தை குறைக்க முன்னுரிமை வழங்கியது.

பிரசவிக்க இருக்கும் தாய்மார்களுக்கு, சுகப்பிரசவம் மற்றும் தாய்ப்பாலூட்டும் முறை குறித்த வகுப்புகளும், மருத்துவர்களின் மகப்பேறு திறமைகளை வலுப்படுத்துவதற்காக மருத்துவ பயிற்சி மையங்களும், தற்பொழுது சீனாவில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

சிசேரியனை தவிர்க்கும் சீன தாய்மார்கள் - காரணம் என்ன?

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, சீனாவின் அணுகுமுறையில் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், சிசேரியன் முறை பிரசவங்களுக்கு மருத்துவமனைகள்தான் பொறுப்பு என்று அவர்களை, கண்டிப்புடன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான்.

பீக்கிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் லியாங்குன் மா கூறும்போது, ‘பிரசவங்களை பார்க்கும் மருத்துவமனைகளை, பிராந்திய வாரியாக ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு, சிசேரியன் முறையை குறைக்க, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டாவிடில், அபராதம் விதிக்கபடுகின்றது’, என கூறினார்.

சிசேரியன் பிரசவங்களின் விகிதங்களோடு மாநிலங்களின் மானியங்களை இணைப்பதும், மருத்துவமனைகளின் உரிமங்களை திரும்பபெறுவதும், அங்கு பின்பற்றப்படும் மற்ற அபராதங்களாகும்.

2012ல் ஹுபெய் மாகாணத்தில், சிசேரியன் பிரசவ விகிதம் அதிகரித்தபோது, அங்குள்ள மருத்துவமனைகள் மூடப்பட்டு, சீர்திருத்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

உலகளவில், சிசேரியன் முறை பிரசவங்களின் விகிதத்தை குறைக்க முற்படும், உலக சுகாதார நிறுவனத்தை சார்ந்த டாக்டர் அனா பிளர் பேட்ரனை பொறுத்தவரை, மருத்துவ சேவையாளர்களை பிரசவ விகித மாற்றங்களுக்கு காரணியாக்கி, அதிகபட்ச அபராதங்களுக்கு உட்படுத்தும் ஒரே நாடு சீனா தான் என கூறுகிறார்.

இதேபோன்ற கொள்கையை கொண்டுள்ள மற்றொரு நாடு போர்ச்சுகல், ஆனால் அங்கு குறைந்த சிசேரியன் விகிதங்களை கொண்ட மருத்துவமனைகளுக்கு பரிசுகள் வழங்கபடுகின்றன.

டாக்டர் பேட்ரன் கூறும்போது, விகிதங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து மருத்துவ சேவையாளர்களை தண்டனைக்கு உட்படுத்துவது ஆபத்தான வழி என்கிறார்.

சிசேரியன் விகிதங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கம், அது தேவைப்படும் பெண்களுக்கு கிடைக்கிறதா என்பதை சொல்வதில்லை.

சிசேரியனை தவிர்க்கும் சீன தாய்மார்கள் - காரணம் என்ன?படத்தின் காப்புரிமைDAISY LAN

சிசேரியன் முறை பிரசவங்களின் விகிதம் அதிகமாக இருக்கும் நாடுகளிலும் கூட, பல பெண்கள் இந்த உயிர் காக்கும் அறுவை சிகிச்சையினை அணுகாமல் இறக்கின்றனர்.

டாக்டர் பேட்ரன் கூறுகையில், பெரு நாட்டில், பணக்கார பெண்களில் இருவரில் ஒருவரும், வறுமையில் உள்ளவர்களில் 5 சதவீத பெண்கள் மட்டுமே சிசேரியன் சிகிச்சை முறை மூலம் பிரசவிக்கின்றனர்.

2018ல் இது குறித்து பிரிட்டிஷ் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில், இணை ஆய்வாளராக இருந்த டாக்டர் கேரின் ரோன்ச்மன்ஸ் கூறுகையில், சீனாவின் வழிகாட்டுதல்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், பிரசவ முறையை தேர்வு செய்து கொள்ள சீன தாய்மார்களுக்கு இருந்த வாய்ப்பினை பறித்துவிட்டதாக கூறியுள்ளார்.

சீன அரசு கொள்கைகளின் ஒரு பகுதி, அந்நாட்டுக்கு மட்டுமே தனித்துவமானது மற்றும் பிற நாடுகளில் இருப்பவர்கள் வருந்தும் அளவிற்கு உள்ளது.

அதாவது, மருத்துவ வழிகாட்டுதல்களின் படியும், சட்ட வழிகாட்டுதல்களின் படியும், ஒரு மருத்துவர், பிரசவிக்க உள்ள தாய்மார்களின் விருப்பமான சிகிச்சை முறைக்கு மாறாகவும், எதிராகவும் செயலாற்றலாம்.

கடந்த ஆண்டு உள்ளூர் தலைப்புகளில் ஆதிக்கம் செலுத்திய ஒரு சம்பவத்தில், பிரசவிக்க காத்திருந்த மா ரோங்ராங் என்ற பெண், தனக்கு சிசேரியன் முறை பிரசவம் மறுக்கபட்டதற்காக, மருத்துவமனை ஜன்னல் வழியாக குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

மற்றொரு சம்பவத்தில், தனது மனைவிக்கு சிசேரியன் முறை சிகிச்சை மறுக்கப்பட்டதினால் ஆத்திரமடைந்த ஒருவர், மருத்துவ நிபுணரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஆரோக்கிய கலாச்சாரத்தின் எழுச்சி

சிசேரியனை தவிர்க்கும் சீன தாய்மார்கள் - காரணம் என்ன?படத்தின் காப்புரிமைEILEEN WANG

இது பயம் மற்றும் மறுப்புகளால் ஏற்பட்ட மாற்றமல்ல. சீனாவின் நடுத்தர வர்க்கத்தினை சேர்ந்த பெண்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். மேலும் அரசாங்கத்தின் தூண்டுதலோடு நேர்மறை தேர்வுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.

முதல் குழந்தையை வயிற்றில் சுமப்பதை அறிந்தவுடனேயே, டெய்சி லேன் என்ற பெண், தான் கேட்டறிந்த தகவல்கள் மூலம், குழந்தை மற்றும் தனது நலனிற்கு, சுகப்பிரசவம்தான் சிறந்தது என முடிவெடுத்தாராம். அவருக்கு முன்னரே, குழந்தை பெற்றிருந்த அவரின் தோழிகள், சிசேரியன் முறையையும் தேர்வு செய்திருந்தனராம்.

சிலர், இயற்கை முறை பிரசவத்தில் உண்டாகும் வலிக்கு பயந்து, சிசேரியன் முறையை தேர்ந்தெடுத்தனர். ஆனால், தற்பொழுது விஷயங்கள் வேறு மாதிரி உள்ளதாக லேன் கூறுகிறார்.

டாக்டர் லியாங்குன் மா கூறுகையில், ‘சீன தாய்மார்கள் சிறந்த வாழ்க்கை தரத்தை விரும்புகிறார்கள். இது, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் எது நல்லது என்பதைப் பற்றிய அவர்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது’.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம்தான், பிரசவம் குறித்தான விவரங்களையும், சிசேரியன் முறை பிரசவத்தில் இருக்கும் ஆபத்தினையும், ஆப்கள் (App) மற்றும் குழு விவாதங்கள் மூலம் அறிய தாய்மார்களை தூண்டுகின்றது என்றும் கூறினார்.

பிரசவத்தில் உண்டாகும் வலியினை குறைக்கும் முறைகளை, வலைத்தளம் மூலம் கற்று கொண்ட பிறகு, இயற்கை முறை பிரசவம்தான் தனக்கு வேண்டும் என முடிவெடுக்க உதவியதாக லேன் கூறினார்.

சீன பெற்றோர்களின் வலைப்பதிவில் ஒரு பிரபலமான, ஆனால் நிரூபிக்கபடாத கூற்றானது என்னவென்றால், ‘இயற்கை முறை பிரசவத்தின் மூலம் பிறக்கும் குழந்தை புத்திசாலித்தனமான குழந்தையாக இருக்கும்’ என்பதுதான்.

சிசேரியனை தவிர்க்கும் சீன தாய்மார்கள் - காரணம் என்ன?

இப்பொழுதுள்ள சில மருத்துவமனைகள் தாய்மார்களின் வலி நிவாரணத்திற்கு, யோகா, இசை போன்றவற்றை மாற்று வழிகளை சிகிச்சையாக கையாளுகின்றன.

இதனால், சீனாவின் 100 மில்லியன் பிறப்புகள் என்ற 2017 ஆய்வின்படி, அங்குள்ள மிகப் பெரிய நகரங்களில், பெரும்பான்மையான தாய்மார்களினன் வயிறு கத்திகளால் கீறப்படுவதில் இருந்து விலகி செல்லுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, பெரிய ஆச்சர்யமாக இல்லை என அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், சீனாவில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் இடையே இன்றும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. மேம்பட்ட வசதிகளும் செலவுகளும், கிராமப்புறத்தில், சிசேரியன் சிகிச்சை முறை விகிதத்தினை அதிகரிக்க செய்யும் போதிலும், சில பகுதிகளில் விகிதங்கள் மிக குறைந்து காணப்படுகின்றன. அதற்கு, பிரசவிக்க இருக்கும் தாய்மார்களுக்கு மருத்துவ பராமரிப்பு கிடைக்காததும் காரணமாக உள்ளது.

சீனாவில் பல ஆண்டுகளாக, நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள்தொகை, கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதே, சமீப காலத்தில் அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய சமுதாய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதே நேரம், ஒரு குழந்தை என்ற கொள்கை தளர்த்தப்பட்டது, சிசேரியன் விகிதத்தின் தாக்கத்திற்கு ஒரு காரணியாக கருதப்படுகிறது. ஆனால், இதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை.

இதனிடையே, சட்டத்தின் பிற மாற்றங்களின்படி, நோயாளிகள் அவர்களுக்கு நேர்ந்த தீங்கை நிரூபிக்கத் தேவையில்லை, ஆனால் கவனக்குறைவும், காரணமுமே சட்டபூர்வமான வழக்கை தொடர போதுமானதாக உள்ளது.

இப்படியான சட்டங்கள் கொண்ட ஒரு நாட்டில், மருத்துவ முறைகேடுகளுக்காக, மகப்பேறு மருத்துவர்கள் மீது அதிக அளவில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.

மாற்றங்களுக்கு உண்டான காரணம் எதுவாக இருப்பினும், டாக்டர். பேட்ரனின் கூற்று என்னவென்றால், ‘சிசேரியன் பிரசவத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், நம்முடைய முக்கிய இலக்காகிய தாய் மற்றும் குழந்தைக்கு வழங்கப்படவேண்டிய சிறந்த பராமரிப்பினை குலைக்கின்றது’. அதே நேரம், குறைந்த அளவிலான சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் வட ஐரோப்பிய நாடுகள் வெறும் கொள்கைகளை கடைபிடிப்பதனால் மட்டுமே அதை சாத்தியப்படுத்தவில்லை. தரமான பராமரிப்பையும் உறுதி செய்ததால் தான் வெற்றி அடைந்துள்ளன, என்று கூறியுள்ளார்.

சிசேரியனை தவிர்க்கும் சீன தாய்மார்கள் - காரணம் என்ன?

நாம் நமது குறிக்கோளை இழக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், சிசேரியன் பிரசவத்தை குறைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ள நிலையில், மனநல காரணங்களுக்காக ஒரு பெண் சிசேரியன் முறையை வேண்டும்போது, அது மறுக்கப்படுவது துரதிஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, சிசேரியன் பிரசவங்களின் வளர்ச்சி விகிதத்தினை சமாளிக்க, முதல் குழந்தை பிரசவிக்க உள்ள தாய்மார்களிடம், சுகப்பிரசவத்தின் நன்மைகளை விளக்கி, அவர்களை இணங்க செய்ய வேண்டும்.

அதற்கு மாறாக அவர்கள் வாதிடலாம், ஆனால் BMJ (பிரிட்டிஷ் மருத்துவ இதழ்) ஆய்வுபடி, இந்த பணி ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சிசேரியன் விகிதங்களைக் குறைக்கும் பணியில், பல்நோக்கு அணுகுமுறையை நடைமுறைப்படுத்தி சீனா முன்னணியில் உள்ளது. ஆனால், அவசிய தேவையின்றி சிசேரியன் பிரசவத்தை பின்பற்றுவோருக்கு, தண்டனையின் அச்சுறுத்தல் இருப்பது தான், வேறுபாடாக உள்ளது.

சீனாவின் லேன் கூறுமபோது, ‘இயற்கை முறை பிரசவத்திற்கு தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், தனக்கு வேறு மாற்றுவழியும் இருக்கவில்லை’, என்கிறார். ‘சீன விதிமுறைகளின் படி, 34 வயதான தான், ஒரு முதிர் வயது தாய் என்றாலும், தைரியமாக சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தையை பெற்றெடுத்ததற்கு, தன்னை தோழிகள் பாராட்டுவதாக தெரிவித்தார்.

தோழிகள் பிரசவிக்கும்போது, சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என்பதை தேர்வு செய்ய வாய்ப்புகள் இருந்ததாகவும், தற்போது அது இல்லை என்றும் அவர் கூறினார்.

BBC.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top